அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அவ்வாறு இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. எலான் மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“எல்லோரையும் விட இந்த புதிய மசோதா குறித்து எலான் மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விபரங்களையும் அவருக்கு நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. எலான் மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார்.
உடனடியாகஎக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் எலான் மஸ்க் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“நான் மாத்திரம் இல்லையென்றால் 2024 ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து இருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.
ஜனாதிபதி ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை இரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இதோடு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கு ‘ஆம்’ என எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்
மேலும், அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் எலான் மஸ்க் முன்னெடுத்துள்ளார
அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டம் ஏமாற்றம் அளித்ததால், ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை ஒன்று உருவாக்கப்பட்டது.
ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் வரவு செலவுத்திட்டம் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன், ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை வழங்கியது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1,300 டொலர் கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.
‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட், நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.